`இனி சிறை தான்'- பைக் சாகச இளைஞர்களை தெறிக்கவிட்டது போலீஸ்


சென்னையில் கடந்த 10 நாட்களில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 37 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், பிரமாண பத்திரத்தை மீறி பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபடுவோர் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரை சாலையில் கடந்த 19-ம் தேதி 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து அனைத்து காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்ய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் மெரினா கடற்கரையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 6 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பைக் சாகசத்தில் ஈடுபடுவதும், இரவு நேரங்களில் குழுக்களாக பிரிந்து ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர், மெரினா கடற்கரை சாலைகளில் பைக் சாகசத்தில் ஈடுபடுவது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து இரவு நேரங்களில் முக்கியமான சாலைகளில் பேரிகார்டு அமைத்தும், மேம்பாலங்களை மூடியும், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி கடந்த 10 நாட்களில் மட்டும் பைக் சாகசத்தில் ஈடுபட்டதாக 37 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதில் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பைக் ரேஸ் மற்றும் சாகசத்தை கட்டுப்படுத்த நேற்று முதல் புதிய நடைமுறையை போக்குவரத்து காவல்துறையினர் கொண்டு வந்துள்ளனர். அதாவது, பைக் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒரு வருடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெற முடிவு செய்துள்ளனர். அந்த பிரமாண பத்திரத்தை மீறி பைக் ரேஸ், சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் சிறைக்கு செல்வார்கள் என போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று பைக் சாகசத்தில் ஈடுபட்ட சேத்துப்பட்டை சேர்ந்த முருகேசன் (19) என்பவரிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து பெற்று அனுப்பி வைத்ததாக தெரிவித்த காவல்துறையினர், சிறுவர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டால் அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களின் கைது நடவடிக்கை தொடரும் எனவும், அதிக சத்தம் எழுப்பக்கூடிய வாகனங்களை தயார் செய்து தரும் மெக்கானிக் கடைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளபடும் எனவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

x