`நகையை கொடு, இல்லன்னா குழந்தையை கொன்றுவிடுவோம்'- தாயை மிரட்டிய கும்பல்


கொள்ளை நடந்த வீடு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே பச்சிளம் குழந்தையை பணயமாக வைத்துக் கொண்டு மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்று இருக்கிறது ஒரு கும்பல்.

வேதாரண்யம் அருகே வடமழை மணக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பன்னீர்செல்வம் (வயது 80). இவரது மகள் மதுபாலாவுக்கு சில தினங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அதனால் தனது தந்தை வீட்டில் குழந்தையுடன் தங்கி ஓய்வு எடுத்து வந்தார்.

நேற்று இரவு அனைவரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் தங்களது முகத்தை மறைத்துக் கொண்டு அங்கு தூங்கிக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை தூக்கிக் கொண்டது. வீட்டில் உள்ள நகை, பணம் அனைத்தையும் தரவில்லை என்றால் குழந்தையை கொன்று விடுவதாக கத்தியை காட்டி மிரட்டியது. அதனால் பன்னீர்செல்வமும் அவரது மகள் மதுபாலாவும் அச்சத்தில் உறைந்துபோய் செய்வதறியாமல் தவித்தனர்.

அதனை பயன்படுத்திக் கொண்ட கொள்ளைக் கும்பல், வீட்டில் பீரோவில் இருந்த 65 சவரன் நகை, மூன்று லட்சம் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியது. இதுகுறித்த புகாரின்பேரில் கரியாப்பட்டினம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தடயங்களை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர். பச்சிளம் குழந்தையை பணயமாக வைத்து கொள்ளைக் கும்பல் வீட்டில் கொள்ளை அடித்துச் சென்றது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x