சிவகங்கை நீதிமன்றத்தில், சிறுமி பாலியல் வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற கைதி மீசையை முறுக்கி பெருமித போஸ் கொடுத்தது சர்ச்சையாகியிருக்கிறது.
சிவகங்கையை அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் ராக்கப்பன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை பாலியல் ரீதியாகச் சீண்டியதாக, அச்சிறுமியின் தாயார் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில் ராக்கப்பன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
ராக்கப்பன் மீதான குற்றம் அரசுத் தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராக்கப்பனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாபுலால் இன்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
தண்டனை பெற்ற குற்றவாளிகளை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தபோது, எந்தவித குற்ற உணர்ச்சியோ, அவமானமோ இல்லாமல் கெத்தாக மீசையை முறுக்கிவிட்டபடி, பெருமித நடைபோட்டுச் சென்றார் ராக்கப்பன். கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட, யுவராஜும் இதேபோல மீசையைத் முறுக்கிவிட்டபடி சிரித்துக்கொண்டே வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.