மாமூல் கேட்டு தராததால் ஆத்திரம் அடைந்த திமுக பிரமுகர்கள் இரண்டு பேர் பிரியாணி கடை மற்றும் டீக் கடைகளை அடித்து நொறுக்கினர். இது தொடர்பான புகாரில் திமுக பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பல்லாவரத்தையடுத்த திருநீர்மலை பகுதி 31-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினரின் உறவினரான தினேஷும் அவரது நண்பரான சுகுமாரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள கடைகளில் மாமூல் வசூலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு அந்தப் பகுதியில் உள்ள டீக்கடை மற்றும் பிரியாணி கடைகளுக்குச் சென்று இரண்டு பேரும் மாமூல் கேட்டுள்ளனர். அப்போது, மாமூல் கொடுக்க கடை உரிமையாளர்கள் மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த தினேஷும், சுகுமாரும் கடைகளில் இருந்த பிரியாணி மற்றும் பொருட்களை தூக்கி வீசியதோடு, கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இது அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து, கடையின் உரிமையாளர் சங்கர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் திமுக பிரமுகர்கள் தினேஷ், சுகுமார் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்து இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.