தமிழக நிதியமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட எடப்பாடியை சேர்ந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரசு முறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 24-ம் தேதி துபாய் சென்றார். அப்போது, சட்டைக்கு மேலே ஜாக்கெட் ஒன்றை அணிந்திருந்தார். இந்த ஜாக்கெட் குறித்து சேலம் மாவட்டம், எடப்பாடியை சேர்ந்த தங்க அருள் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில், துபாய் செல்லும் போது முதல்வர் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி என நிதியமைச்சர் பிடிஆர் தகவல் என்று பதிவிட்டிருந்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்று லோகோவுடன் போட்டிருப்பதாக அந்த நபர் பதிவிட்டிருந்தார். இது தவறான செய்தி என்று அந்த தொலைக்காட்சி நிறுவனமும் பதிவு போட்டிருந்தது.
இந்நிலையில், இந்த பதிவை டேக் செய்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "TN காவல்துறையின் புதிய சமூக ஊடக மையத்திற்கு இது முதல் சமர்ப்பிப்பாக இருக்கலாம். வடிகட்டப்பட்ட முட்டாள் இதுபோன்ற முட்டாள்தனத்தை வெளிப்படையாக இடுகையிடுவதால் ஏற்படும் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை. சங்கிகள் வாட்ஸ்அப் விஷத்தைத் தாண்டிச் செல்லக்கூடாது" என்று காட்டாக கூறியிருந்தார்.
இதனிடையே, சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு போட்ட எடப்பாடியை சேர்ந்த வாலிபர் தங்க அருளை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.