2-ம் வகுப்பு மாணவன் வேன் மோதி உயிரிழந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 6 கேள்விகள் கேட்டு பதில் அளிக்க 24 மணி நேரம் கெடு விதித்துள்ளார்.
சென்னை வளவரவாக்கத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா தனியார் மெட்ரிக் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் திக் ஷித் நேற்று காலை பள்ளி வளாகத்திலேயே வேன் மோதி உயிரிழந்தான். இது தொடர்பாக வேன் ஓட்டுநர் பூங்காவனம், வேன் உதவியாளர் ஞானசக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, பள்ளி தாளாளரை கைது செய்யும் வரை மகனின் உடலை வாங்கப் போவதில்லை என பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவனின் உடல் இன்று இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பள்ளி தாளாளர், பள்ளி முதல்வருக்கு 6 கேள்விகள் கேட்டு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில், பள்ளி வாகனங்களுக்கு என தனியாக பொறுப்பு பணியாளர் இல்லை. பேருந்துக்குழு அமைக்கப்படாதது ஏன்?, 64 வயது முதியவரை வேன் ஓட்டுநராக நியமனம் செய்தது ஏன்?, பள்ளி வளாக வழித்தடத்தில் வேகத் தடை அமைக்கப்படாமல் இருப்பது ஏன்?,
வேனில் இருந்து இறங்கிய மாணவர்கள் அனைவரும் வகுப்பறை சென்றார்களா என பள்ளி முதல்வர் கவனிக்கத் தவறியது ஏன்?, மாணவர்களை ஒழுங்குபடுத்த உடற்கல்வி ஆசிரியர் இல்லாதது ஏன்? அவர் விடுப்பில் சென்றால் உரிய ஆசிரியரை நியமிக்காதது ஏன்?, விபத்து பற்றி அறிந்தும் பள்ளி தாளாளர் பிற்பகல் வரை பள்ளிக்கு வராதது ஏன்? பள்ளி கல்வித்துறைக்கு தகவல் தராதது ஏன்? என்று கூறப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.