மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா, பான் மசாலா குடோனை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அங்கிருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான் மசாலா மூட்டைகளும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை பதுக்கிவைத்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பேரையூர் சாப்டூர் சாலையில் உள்ள தொட்டணம்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவரது மாந்தோப்பில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு அறையில் மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 133 மூட்டைகளில் இருந்த 1872 கிலோ புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அந்த மாந்தோப்பை ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் குத்தகைக்கு எடுத்து, இந்தத் தொழிலுக்கான குடோனாக பயன்படுத்திவந்தது தெரியவந்தது. கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்களை இங்கே பதுக்கிவைத்து, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பிவைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து குடோன் நடத்திய ஸ்ரீவில்லிபுத்தூர் அருண்பாண்டியன்(27), முத்துக்குமார், சாத்தூர் நென்மேனியைச் சேர்ந்த சரவணமணிகண்டன் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ.30 லட்சம் என்றும், அவர்களிடம் இருந்து ரொக்கமாக 87 ஆயிரம் ரூபாயும், இரண்டு கார்கள், ஒரு சரக்கு வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்திருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.