சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை: சிக்கிய வடமாநில மாணவன்


மேற்குவங்கத்தில் கைதான முன்னாள் ஐஐடி மாணவர் கிங்சோ தேப்ஷர்மா

சென்னை ஐஐடி மாணவியை சக மாணவர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் ஐஐடி மாணவர் மேற்குவங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு தன்னுடன் பயின்ற மாணவர் கிங்சோ தேப்ஷர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பேராசிரியரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனவேதனையில் இருந்த மாணவி மூன்று முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மாணவி அளித்த புகாரில் கடந்த 2021 ஜூன் 9-ம் தேதி மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மாணவர்கள் 8 பேர் மீது 354, 354(b), 354(c) 506(1) ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. புகார் அளித்து ஒன்பது மாதங்களாகியும் இதுவரை காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தங்களது கண்டனங்களை தெரிவித்தன.

மேலும் கடந்த 22-ம் தேதி மகளிர் ஆணையத் தலைவரை சந்தித்து பாதிக்கப்பட்ட மாணவி புகாரும் அளித்தார். இதற்கிடையே சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த மாணவி சக மாணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதனையடுத்து மயிலாப்பூர் துணை ஆணையரின் தனிப்படையினர் பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்களை தேடி மேற்குவங்கம் விரைந்தனர். அங்கு தலைமறைவாக இருந்த முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்சோ தேப்சர்மா என்பவரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யபட்ட மாணவனை சென்னைக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் தனிப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பட்டியலின பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதால் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டம் என மேலும் இரு பிரிவுகளை இவ்வழக்கில் சேர்த்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக இருக்கும் மற்ற மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

x