சென்னையில் பள்ளி வளாகத்திலேயே பறிபோன மாணவனின் உயிர்


சென்னையில் பள்ளி வளாகத்திலேயே வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் திக் ஷித். இவன் சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா என்ற தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை பள்ளிக்கு வேனில் வந்துள்ளார் மாணவன் திக் ஷிக். வேனில் இருந்து ஒவ்வொரு மாணவ, மாணவிகள் இறங்கி வகுப்பறைக்கு சென்றுள்ளனர். அப்போது, மாணவன் திக் ஷித்தும் வேனில் இருந்து வகுப்பறைக்கு நடந்து சென்றுள்ளான்.

மாணவர்கள் அனைவரும் இறங்கிவிட்ட நிலையில், வேனை ஓட்டுநர் பூங்காவனம் பின்நோக்கி எடுத்துள்ளார். அப்போது, மாணவன் திக் ஷித் தான் கொண்டு வந்த பொருளை எடுப்பதற்காக சென்றுள்ளார். வேனில் மாணவன் ஏறியபோது, ஓட்டுநர் கவனிக்காமல் எடுத்துள்ளார். இதில் தவறி விழுந்த மாணவன் வேனில் சிக்கியுள்ளான்.

இதில் பலத்த காயம் அடைந்த மாணவன் திக் ஷித்தை அங்கிருந்தவர்கள் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே மாணவன் உயிரிழந்தான். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்தனர்.

இதனிடையே, பள்ளி மீது மாணவனின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாணவன் திக் ஷித் உயிரிழந்தது குறித்து பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

x