காவல்துறை தடியடியால் ரத்தக்களறியான வெள்ளலூர்!


கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர் பேரூராட்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றியது. இதையொட்டி மார்ச் 4-ம் தேதி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதிமுக சார்பில் தலைவர் பதவிக்கு மருதாச்சலமும், துணைத் தலைவர் பதவிக்கு கணேசனும் போட்டியிட்டனர். மறைமுகத்தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது திடீரென திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து அதிமுகவினர் நீதிமன்றம் சென்றனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள் முன்பு மார்ச் 26-ம் மறைமுகத்தேர்தலை நடத்த உத்தரவிட்டது.

இதன்படி வெள்ளலூர் பேரூராட்சி சிறப்பு தேர்தல் அலுவலர்களாக இளங்கோவன், கமலக்கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இன்று மறைமுகத்தேர்தல் நடைபெற்றது. இதற்காக பேரூராட்சி அலுவலகத்திற்கு திமுக, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வந்தபோது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதில் திமுகவைச் சேர்ந்த செந்தில்குமார் காயமடைந்தார். இதனால் அவர் சாலையில் அமர்ந்து காவல்துறையைக் கண்டித்து முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, காவல்துறை வாகனம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் போலீஸார் மீண்டும் தடியடி நடத்தினர். இதில் பார்த்திபன், ராஜேந்திரன் ஆகியோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தால் வெள்ளலூரில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

x