போலீஸ் பிடியில் இருந்து கைது தப்பியது எப்படி?


தர்மராஜ்

புதுக்கோட்டை கிளை சிறையில் நீதிமன்ற உத்தரவின்படி அடைக்கப்பட்டு இருப்பவர் திருச்சி பாலக்கரையை சேர்ந்த தர்மராஜ் (27). இவர் மீது திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உட்பட பல ஊர்களில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளுக்காக அவரை சம்பந்தப்பட்ட ஊர்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு போலீஸார் அழைத்துச் செல்வது வழக்கம்.

அதன்படி தஞ்சை மருத்துவக்கல்லூரி, தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகிய காவல் நிலையங்களில் இவர் மீதுள்ள வழக்குகள் தொடர்பாக ஐந்து வாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இவரை ஆஜர் செய்வதற்காக நேற்று மாலை புதுக்கோட்டை கிளைச் சிறையில் இருந்து இரண்டு காவலர்கள் அரசுப் பேருந்தில் அழைத்து வந்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு நேற்று இரவு 7.15 மணியளவில் மீண்டும் புதுக்கோட்டை கிளைச்சிறைக்கு அழைத்து செல்வதற்காக நீதிமன்றத்திலிருந்து ராமநாதன் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். ராமநாதன் ரவுண்டானா அருகே சென்றபோது திடீரென பாதுகாப்புக்கு வந்த இரண்டு காவலர்களையும் கீழே தள்ளிவிட்டு தர்மராஜ் அங்கிருந்து தப்பியோடினார். உடனடியாக எழுந்த காவலர்கள், தர்மராஜை துரத்திச் சென்றபோதும் அவர்களால் பிடிக்க முடியவில்லை. வாகன போக்குவரத்து நிறைந்த சாலையில் தர்மராஜ் சுலபமாக தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து போலீஸார் தஞ்சை நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தர்மராஜை தீவிரமாக தேடி வருகின்றனர். மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தஞ்சை –திருச்சி, பட்டுக்கோட்டை, திருவாரூர் செல்லும் சாலைகள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் என பல பகுதிகளிலும் வாகனங்களில் கடுமையான சோதனை மேற்கொண்டு தர்மராஜை தேடி வருகின்றனர்.

x