வேலூரில் எலக்ட்ரிக் பைக் வெடித்து சிதறிய விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை, மகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், சின்ன அல்லாபுரத்தை சேர்ந்தவர் துரை வர்மா (49), புகைப்பட கலைஞரான இவர், தனது மகள் மோகன பிரீத்தியுடன் (13) வசித்து வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு எலக்ட்ரி பைக் வாங்கியுள்ளார் துரை வர்மா. இந்நிலையில் நேற்று இரவு எலக்ட்ரிக் பைக்கிற்கு சார்ஜ் போட்டுவிட்டு துரை வர்மா தூங்கியுள்ளார். திடீரென சார்ஜ் வெடித்து பைக் தீப்பற்றி எரிந்தது.
தூக்கத்தில் இருந்தவர்கள் எழுந்தபோது வீடு புகைமூட்டமாக காணப்பட்டுள்ளது. இதனால், உயிர் தப்பிப்பதற்காக தந்தையும், மகளும் கழிவறைக்குள் சென்றுள்ளனர். அப்போது, இருவரும் புகைமூட்டத்தால் மூச்சித்திணறி உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து தீயணைப்பு வீரர்கள், கழிவறைக்குள் சென்று பார்த்தபோது இரண்டு பேரும் இறந்துகிடந்தது தெரியவந்தது.
உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். எலக்ட்ரி பைக் வெடித்து சிதறிய விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.