தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த 19.6.2020-ல் கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி அவர்கள் இருவரையும் சாத்தான்குளம் போலீஸார் விசாரணைக்கு காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் போலீஸார் கடுமையாக தாக்கியதால் முதலில் பென்னிக்ஸ், அடுத்து ஜெயராஜ் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் போலீஸார் என 9 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு நீதிபதி பத்மநாபன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கோவில்பட்டி கிளைச் சிறைக்காவலர் மாரிமுத்து நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். அவர் கூறுகையில், "ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸார் சிறைக்கு அழைத்து வரும் போதே இருவரும் காயத்துடன் காணப்பட்டனர். பென்னிக்ஸை போலீஸ்காரர்கள் முத்துராஜா, செல்லத்துரை ஆகியோர் சிகிச்சைக்காக கிளை சிறையிலிருந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்" என்றார். பின்னர் முத்துராஜா, செல்லத்துரை ஆகியோரை அவர் அடையாளம் காட்டினார். கைதான போலீஸாரின் வழக்கறிஞர்கள் மாரிமுத்துவிடம் குறுக்கு விசாரணை நடத்தினர். பின்னர், விசாரணையை மார்ச் 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.