நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ரயில் முன் பாய்ந்து அரசுப் பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். பள்ளிபாளையம் அருகே தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி பழனிச்சாமி. இவரது மகன் ரிதுன் (15) அங்குள்ள தண்ணீர்பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை 10மணியளவில் மாணவர் ரிதுனை பள்ளி ஆசிரியை ஒருவர் திட்டியதுடன் பள்ளிக்கு வெளியே அவரை நிற்க வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரிதுன், பள்ளிக்கு அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஈரோடு ரயில்வே காவல் துறையினர், மாணவரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ரிதுன் தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் கிராம மக்கள், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாணவரின் மரணத்துக்குக் காரணம் தெரியாமல் எந்த ஆசிரியரும் பள்ளியைவிட்டு வெளியேறக் கூடாது என வலியுறுத்தினர்.
இதையடுத்து, வெப்படை காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், மாணவரைத் திட்டிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கும்வரை உடலை வாங்கப் போவதில்லை எனக் கூறி தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கு எதிரான இலவச ஆலோசனை மையங்கள் :
தற்கொலைத் தடுப்பு மையம் - 104
சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம் - 044 - 24640050, 28352345
பெண்களுக்கான தீர்வு மையம் - 1091