கள்ளக்குறிச்சி சம்பவம்: செங்கல்பட்டில் பாஜகவினர் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு - மேடை அமைத்த மூவர் மீது வழக்கு


செங்கல்பட்டில் போராட்டம் நடத்த கூடாது என தடை விதித்த போலீஸாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடும் பாஜகவினர்

செங்கல்பட்டு: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், இந்தச் சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் செங்கல்பட்டில் போராட்டம் நடத்த மேடை அமைக்க போலீஸார் தடை விதித்தனர். தடையை மீறி மேடை அமைக்க முயன்ற மூன்று பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 30-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டு அதற்கு அனுமதி கேட்டு செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.

ஆனால், ஆர்ப்பாட்டம் நடத்த மேடை அமைப்பதற்கு காவல் துறை அனுமதி மறுத்தது. அதையும் மீறி பாஜகவினர் மேடை அமைத்தனர். அனுமதியின்றி மேடை அமைத்தது தவறு என சுட்டிக்காட்டி மேடையை அகற்றுமாறு போலீஸார் பாஜகவினரிடம் எடுத்துக் கூறினர். மேடையை அகற்ற மறுத்து பாஜகவினர் போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால், மேடை அமைத்த மகேஷ், தனசேகரன், மகேஸ்வரன் ஆகிய மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆர்ப்பாட்டத்துக்கு வந்த எஞ்சிய பாஜகவினரை தனியாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்ட பாஜகவினர் மாவட்டம் முழுவதும் இருந்து செங்கல்பட்டில் தற்போது குவிந்த வருகிறார்கள். இதனால் செங்கல்பட்டில் பதற்றமான சூழல் நிலவு வருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.