தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு மோசடி பணம் சென்றதா?


அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் 30 கோடி மோசடி செய்த வழக்கில் இலங்கைத் தமிழர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடி செய்த பணத்தை தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு பயன்படுத்தினார்களா என்பது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 1993 முதல் 96 வரை அதிமுக ஆட்சி காலத்தில் வனத்துறை அமைச்சராக இருந்தவர் லாரன்ஸ். இவரது மகன் ஆண்டோ ஸ்டாலின், கடந்த 2012-ம் ஆண்டு நிதி நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். நிதி நிறுவன தொழிலில் முன்அனுபவம் இல்லாததால், ஸ்டாலின் நிதி நிறுவனங்களில் இடைத்தரகராக பணியாற்றிய ரமேஷ் என்பவரை தனது நிறுவனத்தின் மேலாளராக பணியமர்த்தினார்.

கடந்த 2018-ம் ஆண்டு நிதி நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்த போது, சுமார் 30 கோடி ரூபாய் வரை பணம் மோசடி நடைபெற்றதை கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்டாலின் இந்த மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இந்த புகாரின் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, மேலாளர் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளியான சுதாகர், சுதாகரின் மனைவி பிரேமசுதா ஆகியோர் கூட்டாக சேர்ந்து இவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பெயரில் 116 போலி நிறுவனங்களை தொடங்கி, போலி நிறுவனங்களுக்கு ஸ்டாலின் நடத்தி வந்த நிதி நிறுவனம் மூலமாக 30 கோடி ரூபாய் வரை கடனாக பெற்று மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி விவகாரத்தில் கடந்த டிசம்பரில் மேலாளர் ரமேஷை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பல வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த சுதாகர் மற்றும் அவரது மனைவி பிரேமா சுதாவை நேற்று பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சுதாகர் இலங்கைத்தமிழர் என்பதும், இந்திய பாஸ்போர்ட் மூலமாக தமிழகத்திற்கு வந்து தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடி செய்த பணத்தை தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு சுதாகர் பயன்படுத்தினரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x