ஹைதராபாத்தில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் தூக்கிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் 11 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் போய்கூடா என்ற பகுதியில் பழைய பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு உள்ளது. இங்கு இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பு தீ மளமளவென எரிந்து கிடங்கு முழுவதும் பரவியது. தீயில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். ஒரு பக்கம் வீரர்கள் தீயை அணைத்துக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் தீ எரிந்து கொண்டே இருந்தது.
பின்னர் தீயை கட்டுப்படுத்திக் கொண்டே உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு இதுவரை 11 பேரின் சடலங்களை மீட்டுள்ளனர். ஒருவர் உயிர் தப்பினார். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட 11 பேரின் சடலங்கள் அங்குள்ள காந்தி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மாநில அமைச்சர் சீனிவாசன் ஆய்வு செய்தார். உயிரிழந்த 11 பேரும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனவும், மேலும் சிலர் உள்ளே சிக்கி இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 11 பேரும் தூக்கத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததுதான் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.