அப்துல்கலாமின் உதவியாளர் மீது நடிகர் விக்னேஷ் மோசடி புகார்


5 கோடி ரூபாய் முதலீடு செய்தால் 500 கோடி ரூபாய் கிடைக்கும் என்று ஆசைகாட்டி தன்னிடம் 1.80 கோடி ரூபாயை மோசடி செய்ததாக அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் உள்பட மோசடி கும்பல் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விக்னேஷ் புகார் அளித்துள்ளார்.

சென்னை கிண்டி ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகர் விக்னேஷ் (50). இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்தார். அதில், நான் 30 ஆண்டுகாலம் சினிமாவில் நடிகராக இருந்துள்ளேன். கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் தனக்கு சொந்தமான கட்டிடத்தில் உயர்ரக சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறேன்.

தனது கடைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சைரன் வாகனத்தில் வந்த ராம்பிரபு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. வாடிக்கையாளர் ராம்பிரபு அடிக்கடி என் கடைக்கு வந்து செல்லும் நிலையில் ஒரு நாள் அவரிடம் ஏன் உங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என கேட்டதற்கு இந்திய அரசின் அனுமதியோடு ஆஸ்திரேலியா நாட்டு நிறுவனத்திற்கு 3 ஆயிரம் கோடி மதிப்பிலான இரிடியத்தை விற்றதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு மற்றும் சைரன் வைத்த வாகனம் கொடுக்கப்பட்டுள்ளதாக ராம்பிரபு தெரிவித்தார்.

மோசடி செய்த ராம்பிரபு

அரசு அனுமதியுடன் இரிடியம் தொழில் செய்து வருகிறேன். அதில் 5 கோடி ரூபாய் முதலீடு செய்தால் 500 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என கூறி தன்னையும் அந்த தொழிலில் முதலீடு செய்யுமாறு ராம்பிரபு கேட்டு கொண்டார். பின்னர் ராம்பிரபு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இரிடியம் குறித்தான கருத்தரங்கு கூட்டத்திற்கு தன்னை அழைத்துச் சென்று, அங்கு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் மற்றும் ஓய்வுபெற்ற கர்னல் உள்ளிட்ட பலரை அறிமுகப்படுத்தி, இவர்கள் அன்னைவரும் என்னுடன் தொழிலில் ஈடுபட்டுள்ளனர், இரிடியம் விற்பனை சட்டபூர்வமான தொழில் என ராம் பிரபு தன்னை நம்ப வைத்தார்.

விருதுநகரில் உள்ள பண்ணை வீட்டிற்கு ராம்பிரபு தன்னை அழைத்து சென்று தொழில் ரீதியான நண்பர்களை சந்திக்க வைத்தார். இதனை நம்பி 1 கோடியே 81 லட்சத்துக்கு 79 ஆயிரத்தை ராம்பிரபுவின் வங்கி கணக்கிற்கு சிறுக சிறுக அனுப்பினேன். பணம் கொடுத்து பல நாட்களாகியும், ராம்பிரபு கூறியதுபோல் எந்த பணமும் வராததால் அவரிடம் சென்று இது குறித்து கேட்டபோது கன்டெய்னரில் 500 கோடி ரூபாய் பணம் வந்து கொண்டிருப்பதாகவும், வந்த உடன் வட்டியோடு சேர்த்து தந்து விடுவதாக கூறி கையெழுத்திட்டுக் காசோலையை கொடுத்தார். பின்னர் ராம்பிரபு மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை பற்றி விசாரித்தபோது அவர் ஒரு மோசடி நபர் என்பதும் அவர் மீது விருதுநகர் மாவட்டத்தில் மோசடி வழக்கு உள்ளதும் தெரியவந்தது.

பின்னர் ராம்பிரபுவிடம் இதுகுறித்து கேட்டபோது பணத்தை திருப்பி கொடுக்க முடியாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்தார். தன்னைப் போல பல பேர் ராம்பிரபுவிடம் கோடிக்கணக்கில் பணத்தை இழந்திருக்கின்றனர். மோசடி நபர் ராம்பிரபு, பொன்ராஜ் மற்றும் ராம்பிரபுவின் கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்டு தரவேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x