சென்னை | காரில் இளம்பெண் கடத்தப்பட்டதாக புகார்; காப்பாற்ற கோரி கத்தியது ‘சும்மா விளையாட்டுக்கு!’ - எச்சரித்து அனுப்பிய போலீஸார்


சென்னை: தி.நகரில் காரில் இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அசோக் நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் விநோத தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை தி.நகரில் கடந்த 14 - ம்தேதி நள்ளிரவு பசுல்லா சாலை சிக்னலில் இருந்து கோடம்பாக்கம் நோக்கி சில்வர் கலர் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த காரில் இளம்பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் என்றும், அவர் உதவி கேட்டு கூக்குரல் எழுப்பியதாகவும் பார்த்த பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து அசோக் நகர் காவல் உதவி ஆணையர் ஆல்டர் இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண் காணிப்பு கேமராவில் பதிவான காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டார்.

அதில் சம்பந்தப்பட்ட வாகனம் சாலிகிராமம் நவநீதம்மாள் தெருவில் நிற்பது தெரியவந்தது. இதையடுத்து காரின் உரிமையாளரான மகேந்திரனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அதுபற்றி போலீஸார் கூறும்போது, ‘மகேந்திரன் சகோதரரின் 15 வயது மகள் 10-ம்‌ வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.அதைக் கொண்டாடும் விதமாக சிறுமியுடன் குடும்பத்தினர் அனைவரும் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜூஸ் கடைக்கு 2 காரில் சென்று சாப்பிட்டு விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது சிறுமியை மதிப்பெண் குறைவாக எடுத்ததாக கூறி காரில் உள்ள அனைவரும் கேலி செய்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த சிறுமி கேலி செய்வதை நிறுத்துவதற்காக வேடிக்கையாக, ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என விளையாட்டாகக் கூச்சலிட்டுள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள், இளம்பெண் காரில் கடத்தப்பட்டதாக தவறாக நினைத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து காவல் உதவி ஆணையர் ஆல்டர் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தார். இவ்வாறு போலீஸார் கூறினார்.