கன்னியாகுமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் இன்று 340 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில், கஞ்சா, குட்கா, போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இது தொடர்பாக தீவிரமாகக் கண்காணிக்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சார்லஸ் தலைமையிலான போலீஸார், முப்பந்தல் கண்ணுபொத்தை ரயில்வே கேட் அருகில் ரோந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பினார்.
இன்னொருவரைப் பிடித்து விசாரித்தபோது அவர்கள் இருவரும் ஆவரைகுளம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்(40) மற்றும் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த சந்திரபால் (45) என்பது தெரியவந்தது. பின்பு அவர்கள் வந்த வாகனத்தைச் சோதனை செய்தபோது அவர்கள் சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 340 கிலோ குட்கா, புகையிலை மற்றும் ரூபாய் 1,05,600 ரூபாய் கையிருப்பாக வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்பு அதனை பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. சுரேஷ் கைது செய்யப்பட்டார். தப்பியோடியவரைத் தேடிவருகின்றனர்.