ஈரோட்டில் வீட்டில் 232.5 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கில், 10 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த வழக்கறிஞர்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு சோலார் வசந்தம் நகர் கோல்டன் சிட்டி ஹரி கார்டனில் கடந்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக கேசவன்(34), அவரது மனைவி பிருந்தா(24) ஆகிய இருவரையும் ஈரோடு தாலுகா போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 232.5 கிலோ கஞ்சா மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.
அதைத்தொடா்ந்து ஈரோடு மரப்பாலம் குயவன் திட்டு பகுதியைச் சேர்ந்த சென்னியப்பன் மகன் சரவணனை(37) கைது செய்தனர். கஞ்சா கடத்தலுக்கு உதவியாக இருந்ததாக வழக்கறிஞரான ஈரோடு கள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த எழில் (38), வழக்கறிஞர் நதியா (32) ஈரோடு மாணிக்கம்பாளையம் ரோடு நேதாஜி நகரைச் சேர்ந்த மதன் என்ற மதன்குமார்(39), அவரது மனைவி கவுரி(39) ஆகிய 4 பேரை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 10 மாதங்களாகத் தலைமறைவாக இருந்த எழில், மதன், கவுரி, நதியா. 4 பேரையும் ஈரோடு தாலுகா போலீஸார் நேற்று கைதுசெய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.