`உங்க ஓடிபி நம்பரை கொடுங்க': ரூ.1.18 லட்சத்தை இழந்த அரசு ஊழியர்


பெருந்துறை மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் வங்கி வாடிக்கையாளர் போல் பேசி அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.18 லட்சத்தை சுருட்டிய மர்ம நபர்கள் ஈரோடு போலீஸார் தேடி வருகின்றனர்.

வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து தொடர்பு கொள்பவர்களிடம் வங்கிக் கணக்கு எண், செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி எண், ஏடிஎம் பின் எண் போன்றவற்றை பகிரக் கூடாது என தொடர்ச்சியாக வங்கி நிர்வாகங்கள் மற்றும் போலீஸாரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஏமாறுபர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இதேபோன்ற சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் வங்கி நிதி மோசடி ஒன்று அரங்கேறியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை கூட்டுறவு நகரைச் சேர்ந்தவர் பாபு (42). இவர் பெருந்துறை கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் துணை வருவாய் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கிரெடிட் கார்டு முடக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதையடுத்து அவர் இணையதளத்தில் இருந்த வாடிக்கையாளர் சேவை நம்பரை கண்டுபிடித்து அதில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது கிரெடிட் கார்டு மீண்டும் செயல்பட ரூ.8 ஆயிரம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். உடனடியாக அவர் ரூ.8 ஆயிரம் செலுத்தியுள்ளார். அதன்பின் சிறிது நேரத்தில் பாபுவின் கிரெடிட் கார்டு மீண்டும் செயல்படத் தொடங்கியது.

சிறிது நேரம் கழித்து பாபு தொலைபேசிக்கு மற்றொரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், நான் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுகிறேன் என்றும் உங்கள் செல்போன் எண்ணுக்கு வந்த ஓடிபி குறித்த விவரம் கூறுங்கள் என்றும் பேசியுள்ளார்.

இதனை நம்பி அனைத்து தகவலையும் பாபு கொடுத்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக்கணக்கில் இருந்து முதல் கட்டமாக ரூ.75 ஆயிரத்து 998, 2ம் கட்டமாக ரூ.18,195 என அடுத்தடுத்து பணம் உருவப்பட்டுள்ளது. முடிவில் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 193 எடுக்கப்பட்டுள்ளது.

இதில் அதிர்ச்சியடைந்த பாபு, வங்கிக் கணக்கு வைத்துள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். அப்போதுதான் மோசடி கும்பல் தன்னை ஏமாற்றியதை அவர் உணர்ந்துள்ளார். இதன்பின் ஈரோடு சைபர் க்ரைம் போலீஸிடம் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஏமாற்றுபவர்கள் இருக்கத் தான் செய்வர். நாம் தான் விழிப்பாக இருக்க வேண்டும்.

x