ஹோலி நடனம்: போதையில் தன்னைத்தானே குத்திக்கொண்டு இறந்த நபர்!


வட இந்தியாவில் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையில் மது அருந்திவிட்டு நடனம் ஆடுவதில் பலரும் ஆர்வம் காட்டுவார்கள். சில சமயம் அந்தக் கொண்டாட்டம் விபரீதமாகிவிடுவதும் உண்டு.

மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரின் பங்கங்கா பகுதியில், நடந்திருக்கும் சம்பவமும் அப்படியான ஒரு துயர நிகழ்வுதான். வியாழக்கிழமை (மார்ச் 17) இரவில், அங்கு ஹோலி கொண்டாட்டத்தில் சிலர் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களில் கோபால் சோலங்கி எனும் 38 வயது நபர், தனது கையில் கத்தி வைத்தபடி நண்பர்களுடன் நடனமாடிக்கொண்டிருந்தார். அப்போது கத்தியால் குத்திக்கொள்வது போல பாவனை செய்துகொண்டிருந்தார். போதையில் இருந்ததால், என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் தன்னைத்தானே நிஜமாகவே நான்கு முறை குத்திக்கொண்டார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த ஒருவர் எடுத்த காணொலியில் பதிவாகியிருக்கின்றன.

ஒரு கட்டத்தில் விபரீதத்தை உணர்ந்த நண்பர்களும் உறவினர்களும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

கொண்டாட்டங்களின்போது ஆபத்தை உணராமல் விபரீதச் செயல்களில் ஈடுபடுபவர்கள், அடுத்தவர்களுக்கு மட்டுமல்லாமல் தங்களுக்கும் மீள முடியாத பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறார்கள். மத்திய பிரதேசத்தின் கோபால் சோலங்கியின் மரணம், மதுபோதையில் தன்னிலை மறந்து நடந்துகொள்பவர்களுக்கு ஒரு பாடம்.

x