மதுரை ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி. நகர் பகுதியில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே, மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் அக்பர்கான் தலைமையில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலா, ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா ஆகியோரைக் கொண்ட தனிப்படையினர் அந்த வீட்டில் திடீர் ரெய்டு நடத்தினர்.
பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கிருஷ்ணமூர்த்தி, அசோக்ராஜ் ஆகியோரை கைது செய்த போலீஸார், அங்கிருந்த 5 பெண்களையும், 16 வயது சிறுமி ஒருவரையும் மீட்டனர். விசாரணையில், அந்தச் சிறுமியின் தாயே அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. சிறுமியின் பரிதாப நிலை குறித்து சமூக நலத்துறைக்குத் தகவல் கொடுத்த போலீஸார், அவரது தாயை கடுமையாக எச்சரித்தனர். இந்த வழக்கில் ஆட்டோ டிரைவர் உள்பட 11 பேரைச் சேர்த்துள்ள போலீஸார், வேறு யாருக்கும் இந்தத் தொழிலில் தொடர்பிருக்கிறதா என்று விசாரித்து வருகிறார்கள்.