தஞ்சை, தென் மாவட்டங்களில் `கள்ளன்' படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர்களில் சில சமூக அமைப்பினர் தகராறில் ஈடுபட்டதோடு, படத்தின் பேனர்களை கிழித்தெறிந்தனர். இதனால், படம் திரையிடப்படவில்லை.
கரு பழனியப்பன் நடிப்பில் உருவாகியுள்ள `கள்ளன்' திரைப்படம் குறிப்பிட்ட சமூக மக்களை களங்கப்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை செயலர், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மண்டல இயக்குநர், படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். ஆனால் படத்தை வெளியிட தடை விதிக்கவில்லை.
இதனிடையே, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் கள்ளன் திரைப்படம் திரையிட தடை விதிக்க வேண்டுமென, தமிழ்நாடு கள்ளர் படைப்பற்று நலச் சங்கத் தலைவர் வசந்த் காடவராயர் தலைமையில் அந்த அமைப்பினர் சிவகங்கை ஆட் சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், "ஏழு திருடர்களின் வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப் படத்துக்கு கள்ளர் சமூகத்தினை களங்கப்படுத்தும் வகையில் கள்ளன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த திரைப்படம் மூலம் சாதிய மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் இந்த திரைப்படத்தை சிவகங்கை மாவட்ட திரையரங்குகளில் திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தஞ்சாவூர் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களில் கள்ளன் படத்தை வெளியிடக்கூடாது என ஒரு சமூக அமைப்பினர் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த பேனரை அவர்கள் கிழித்து எறிந்தனர். இதனால், படம் திரையிடப்படவில்லை. இதனிடையே, இயக்குநர் சந்திராவுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருவதாகவும் முதல்வர் தலையிட வேண்டும் என்றும் படக்குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.