சென்னையில் கஞ்சா எண்ணெய்யை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள கும்பலின் தலைவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை தலைமை செயலக காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட தனியார் விடுதியில் கஞ்சா எண்ணெய் கைமாறுவதாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையரின் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று தனியார் விடுதியில் பதுங்கி இருந்த இருவரை கைது செய்தனர். மேலும் விடுதியில் மறைத்து வைத்திருந்த 10 கிலோ ஹாசிஷ் எனப்படும் கஞ்சா எண்ணெய் மற்றும் 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைபொருள் கடத்தி வந்த நபர்கள் ரெட்ஹில்ஸ் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் விஜயகுமார் (37), அழகுராஜா (34) என தெரியவந்தது. இவர்கள் ரெட்ஹில்ஸ் பகுதிலிருந்து லாரி மூலமாக சட்டவிரோதமாக செம்மர கட்டைகளை நேபாள மாநிலத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து லாரியில் கஞ்சா எண்ணெய் எனப்படும் ஹாசிஷ் போதை பொருளை மறைத்து வைத்து சென்னைக்கு கடத்தி வந்து விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த போதை பொருள் ஒரு கிராம் 1750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், சீனாவில் இருந்து ஹாசிஷ் எனப்படும் போதை மருந்தில் இருந்து இந்த எண்ணெய்யை தயாரித்து அதை நேபாளத்துக்கு கடத்தி வந்து, பின்னர் இந்தியா முழுவதும் பல பகுதிகளுக்கு லாரி மூலமாக விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
கடந்த ஆண்டு நாகப்பட்டினத்தில் பிடிபட்ட நபர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காரைக்குடி பகுதியில் விற்பனை செய்துவிட்டு பின்னர் சென்னைக்கு வந்துவிற்க முயன்ற போது சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் மதிப்பு 1.75 கோடி என்றும் தலைமறைவாக உள்ள கும்பலின் தலைவனை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.