பாஜக தலைவரிடமிருந்து செல்போன் பறித்துச்சென்ற நபர் கைது!


பாஜக முன்னாள் எம்.பி விஜய் கோயல்

டெல்லியில் பாஜக முன்னாள் எம்.பி-யான விஜய் கோயலிடமிருந்து செல்போனைப் பறித்துச் சென்ற நபரைப் போலீஸார் கைதுசெய்தனர்.

நேற்று மாலை, விஜய் கோயல் டெல்லியின் தரியாகஞ்ச் பகுதியிலிருந்து செங்கோட்டையை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். சுமார் 7.45 மணி அளவில் அவரது கார், ஜும்மா மசூதி மெட்ரோ ரயில்நிலையம் அருகே வந்தபோது, காரில் அமர்ந்திருந்த அவரிடமிருந்து ஒரு நபர் செல்போனைப் பறித்துச் சென்றார். இந்தச் சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது.

விஜய் கோயல் டெல்லி பாஜக தலைவராக இருந்தவர். மத்திய இணையமைச்சராகவும் பதவிவகித்தவர். ஆளுங்கட்சிப் பிரமுகரிடமிருந்தே செல்போனைத் திருடிய அந்த நபரைப் போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர்.

இந்நிலையில், இன்று காலை அந்த நபர் கைதுசெய்யப்பட்டார். அவரது பெயர் சாஜன் என்றும், அவரிடமிருந்து விஜய் கோயலின் செல்போன் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

x