பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்; கண்டுகொள்ளாத கல்வி அலுவலர்


மேலூர் அருகே மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த அரசு பள்ளி ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டார். 20 நாட்களுக்கு முன்பே புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காத மதுரை மாவட்ட கல்வி அலுவலர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மனப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிந்துவந்தவர் மதுரையைச் சேர்ந்த பாரதி. இவர் கடந்த சில மாதங்களாக தங்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், தொட்டுத் தொட்டுப் பேசுவதாகவும் மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் புகார் கூறினர். இதுகுறித்து அப்போதே பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

இந்தச் சூழலில் அடுத்தடுத்து அவர் அதேபோல நடந்துகொண்டதால், இந்தப் பிரச்சினையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலையிட்டது. இதைத் தொடர்ந்து, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வெள்ளைச்சாமி, மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் ஆசிரியர் பாரதியை போக்சோ சட்டத்தின் கீழ் இன்று போலீஸார் கைது செய்தனர்.

இதற்கிடையே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பிரேமலதா, செயலாளர் முத்துராணி ஆகியோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் இன்று மனு கொடுத்தனர். அந்த மனுவில், "மனப்பட்டி பள்ளியில் நாங்கள் நடத்திய நேரடி விசாரணையில், அந்த ஆசிரியர் செல்போனில் தேவையில்லாத படங்களைப் பார்த்து மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம் செய்தது உறுதிசெய்யப்பட்டது. அந்த விவரங்களை நாங்கள் நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும், குழந்தைகள் நலக்குழு ஆணையரிடமும் புகாராகக் கொடுத்த பிறகே ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், ஏற்கெனவே அந்த மாணவிகள் பள்ளியில் உள்ள புகார் பெட்டியில் இதுகுறித்து எழுதிப்போட்டிருக்கிறார்கள். சைல்டு ஹெல்ப் லைன் எண்ணுக்கும் (1098) புகார் செய்திருக்கிறார்கள். அதேபோல கடந்த மாதம் 26-ம் தேதி மாவட்ட கல்வி அதிகாரியிடமும் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குற்றம் நடந்தது தெரிந்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காததும் போக்சோ சட்டத்தின்படி குற்றமே. எனவே, மாவட்ட கல்வி அலுவலர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிகள் பட்டியலினத்தவர்களாக இருப்பதால், கைது செய்யப்பட்ட ஆசிரியர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

x