தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர்கள் கணேசன் - மாடத்தி தம்பதியினர். இவர்களது மகள் இந்து பிரியா (18), புளியங்குடியில் மனோ கல்லூரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படித்துவந்தார். கணேசன் இறந்துவிட்டதால் மாடத்தி தனி ஆளாக பீடி சுற்றி தன் மகளைப் படிக்கவைத்தார்.
இந்நிலையில், இரு நாட்களாக சோகமாகக் காணப்பட்ட இந்து பிரியா, நேற்று தன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து புளியங்குடி போலீஸார் வீட்டிற்குவந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டபோது, அவர் தற்கொலை செய்துகொண்ட அறையில் கடிதம் ஒன்று சிக்கியது. 2 பக்கம் கொண்ட அந்தக் கடிதத்தில், கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் மற்றும் ஒரு பேராசிரியைதான் காரணம் என்றும், தான் செய்யாத தவறுக்குமன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்குமாறு அவர்கள் தன்னை நிர்பந்தப்படுத்தியதாகவும், அதனால் தான் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதாகவும் எழுதிவைத்திருந்தார்.
அதனடிப்படையில், போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். இதற்கிடையே தற்கொலைக்குத் தூண்டியவர்களைக் கைது செய்யக்கோரி மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இறந்த மாணவியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, மாணவி கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பேராசிரியர் முத்துமணி, பேராசிரியை வளர்மதி ஆகிய 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.