ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதியில் முகமூடி அணிந்து நகை திருடிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 பவுன் தங்க நகை, ரூ.2.50 லட்சம் பணம் மற்றும் திருடிய பொருட்கள் மூலம் வாங்கிய ரூ.4 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையம் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தென்கரையை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (27), அருண்குமார் (27) ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்த போது, பெரியகுளத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் தலைமையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தேனி சென்ற போலீஸார், மூர்த்தியின் தாய் சீனித்தாய் (53), மனைவி அனிதா பிரியா (29), உறவினர் நாக ஜோதி (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் லட்சுமி, மோகன் ஆகிய இருவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.75 லட்சம் மதிப்புகள் 150 பவுன் தங்க நகை, ரூ.2.50 லட்சம் பணம், 3 லேப்டாப், 3 டேப்லெட், 3 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் திருடிய பொருட்கள் மூலம் வாங்கிய ரூ.4 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி மூர்த்தியை தனிப்படை போலீஸார், தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த போலீஸாரை எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா நேரில் அழைத்து பாராட்டினார்.
இது குறித்து போலீஸார் கூறுகையில்: "தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த மூர்த்தி (33) 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவர் தனியாகவும், குழுவாகும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திருடி வந்துள்ளார். திருடிய பணம் மூலம் மதுரை அருகே கருப்பாயூரணியில் அடுக்குமாடி குடியிருப்பு, ராஜபாளையத்தில் காட்டன் மில் என கோடிக் கணக்கில் பல்வேறு சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.
மூர்த்தி செல்போன் பயன்படுத்துவது இல்லை என்பதால் அவரை பிடிப்பதில், சிரமம் ஏற்பட்டு உள்ளது. மூர்த்தியை கைது செய்தால் திருட்டு குறித்த முழு விவரம் தெரியவரும், என போலீஸார் கூறினர்.திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த போலீஸாரை எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.