தூத்துக்குடி துறைமுகத்தில் பிலிப்பைன்ஸ் மாலுமி தூக்கிட்டு தற்கொலை: போலீஸார் தீவிர விசாரணை


உயிரிழந்த பிலிப்பைன்ஸ் மாலுமி கிம் ஜோரேன்

தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி துறைமுகத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு சரக்கு கப்பல்கள் வருகை தருகின்றன. இதன் ஒரு பகுதியாக பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த எம்வி ஸ்டார் லூரா என்ற கப்பல் 22 மாலுமிகளுடன் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டது. இந்த கப்பல் இந்தோனேசியா நாட்டில் 70 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றிக் கொண்டு கடந்த 17-ம் தேதி தூத்துக்குடி வருகை தந்தது.

புதிய துறைமுகத்தில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் அனுமதிக்காக இந்த கப்பல் காத்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் இந்த கப்பலில் பணியாற்றி வந்த நபர் ஒருவர் நேற்று இரவு கப்பலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கடலோர காவல் குழும போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு அந்த கப்பல் 9வது கப்பல்கள் நிறுத்தும் பெர்த்திற்கு கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் மற்றும் கடல் காவல் நிலைய போலீஸார் சம்பவம் நடந்த கப்பலுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் தூக்கில் தொங்கிய நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்டவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சினம்பான் கிம் ஜோரேன் (31) என்பது தெரியவந்தது. அவர் சொந்த பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டு தற்கொலை என சித்தரிக்கப்பட்டதா, என்பது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை கொண்டு வருகின்றனர்.

x