துரைமுருகன் உறவினர்கள் மீதான நில ஆக்கிரமிப்பு புகாரில் முக்கிய உத்தரவு


அமைச்சர் துரைமுருகனின் உறவினர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை பாதிக்கப்பட்டவர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது உறவினர்கள் முருகன், கிருஷ்ணன் ஆகியோர் மீதும் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பொய்யான போலி ஆவணங்களை சமர்ப்பித்து தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி டெல்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை டெல்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது, வேலூர் மாவட்ட ஆட்சியர் சார்பாக, மாவட்ட சப் கலெக்டர் முனீர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி பாலாஜி மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சார்பாக டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆகியோர் ஆஜரானார்கள்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிலத்தை மீட்டு அவர்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையினை ஒருமாத காலத்திற்குள் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

x