விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
விருதுநகர் அருகே கோட்டூர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். மருந்து கலவை அறையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் 2 அறைகளில் தீ பரவியது. இதில் குணவதி, பேபி, பொண்ணு ஆகிய மூன்று தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை உடனடியாக விருதுநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த விருதுநகர் தீயணைப்புத்துறையினர் மேலும் தீ பரவ விடாமல் அணைத்தனர். இந்த வெடிவிபத்தில் 2 அறைகள் சேதமடைந்தன. குத்தகைக்கு பட்டாசு ஆலைகளை இயக்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில், இந்த பட்டாசு ஆலை அப்படி இயக்கப்பட்டதா என வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.