கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை - ரூ.1.10 லட்சம் பறிமுதல்


கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

கோவில்பட்டி: கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத ரூ.1.10 லட்சம் ரொக்கப் பணம் சிக்கியது.

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால்துரை தலைமையில் ஆய்வாளர் அனிதா உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு இன்று காலை 11.45 மணிக்கு வந்தனர். அவர்களில் சிலர் ஓட்டுநர், நடத்துநரை போன்று காக்கி சட்டை, பேன்ட் மற்றும் கைலி அணிந்து மாறுவேடத்தில் வந்திருந்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வந்ததும், மற்ற பணிகள் நிறுத்தப்பட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரிக்கப்பட்டு, அதில் பொதுமக்களை மட்டும் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலக பிரதான நுழைவாயில் கதவு இழுத்து மூடப்பட்டது. பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வட்டார போக்குவரத்து அலுவலகம், அங்குள்ள ஓட்டுநர் உரிமம் பெற புகைப்படம் எடுக்கும் அறை ஆகியவற்றில் சோதனையில் ஈடுட்டனர்.

மேலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் பூட்டப்பட்ட அறையில் விசாரணை நடத்தினர். அலுவலகத்துக்கு உள்ளே இருந்த புரோக்கர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், ஆம்னி பேருந்து மற்றும் மினி பேருந்துகளின் உரிமையாளர்கள் சுற்றி வளைக்கப்பட்டு அவர்களிடம் இருந்த செல்போன்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம்.

மேலும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள கணினிகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதே போல், அலுவலக அறைகள், கழிப்பறை உள்ளிட்ட அறைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கணக்கில் வராத ரூ.1.10 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து வட்டார போக்குவரத்து அலுவலர், புரோக்கர்கள் உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை நடத்தினர்.

x