என்ஐஏ-விலும் கறுப்பாடு: பயங்கரவாதிகளுக்கு உதவியதாக சிக்கிய எஸ்பி!


எஸ்பி அந்தஸ்திலான என்ஐஏ அதிகாரி ஒருவர் பயங்கரவாதிகளுக்கு உதவியதான குற்றச்சாட்டில், புலனாய்வு அமைப்பின் தீவிர விசாரணைக்குப் பின்னர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த அரவிந்த் திக்விஜய் என்ற ஐபிஎஸ் அதிகாரி, தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ அமைப்பு உருவானது முதல் அதன் செயல்பாடுகளில் பங்கேற்று வந்திருக்கிறார். இந்த நபர், தடை செய்யபட்ட லஷ்கர் இ தொய்பா குழுவுக்கு உதவியதான குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

கடந்தாண்டு நவம்பரில், காஷ்மீரை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரான குர்ராம் பர்வேஸ் என்பவர் உட்பட சிலரை என்ஐஏ கைது செய்தது. விசாரணையில் என்ஐஏ அமைப்பின் ரகசிய ஆவணங்கள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ஷிம்லாவில் உள்ள அரவிந்த் திக்விஜய்யின் வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டனர். உடனடியாக எஸ்பி அந்தஸ்திலான திக் விஜய் பணி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து குர்ராம் பர்வேஸுக்கு எதிரான வழக்கில், திக்விஜய்யும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

ஒருவார காலம் என்ஐஏ உயரதிகாரிகளின் தீவிர விசாரணையில் உட்படுத்தப்பட்டிருந்த திக் விஜய் இன்று(பிப்.25) மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கை விசாரிக்கும் டெல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் திக் விஜய், குர்ராம் பர்வேஸ் உள்ளிட்ட 6 பேர்களின் சிறைவாசத்தை மார்ச் 24 வரை நீட்டித்து உத்தரவிட்டது.

என்ஐஏ வசமிருந்த நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய ஆவணங்களை தடைசெய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு வழங்கியதுடன், அந்த அமைப்புக்கான ஆட்களை நாடு முழுக்க நியமிக்கும் பணியிலும் திக் விஜய் உள்ளிட்டோர் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஊபா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் மற்றும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

x