அம்பானி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஓராண்டாகியும் திணறும் விசாரணை!


அன்டிலியா மாளிகை

மும்பையிலுள்ள முகேஷ் அம்பானியின் அன்டிலியா மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கின் புலனாய்வு, இன்றோடு(பிப்.25) ஓராண்டாகியும் முன்னேற்றம் இன்றி தவிக்கிறது.

2021, பிப்.25 அதிகாலை தெற்கு மும்பை பரபரப்பானது. முகேஷ் அம்பானியின் அன்டிலியா மாளிகை அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் 20 ஜெலட்டின் குச்சிகளும், அம்பானி தம்பதியருக்கான மிரட்டல் கடிதமும் கண்டெடுக்கப்பட்டன. தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ களாமிறங்கி விசாரணை மேற்கொண்டதில், ஜெய்ஷ் உல் ஹிந்த் என்ற தீவிரவாத அமைப்பின் பெயரில், திஹார் ஜெயில் வரை மர்மங்கள் நீண்டன. ஆனால் அதன் பின்னணியில் மும்பை காவல்துறையின் கறுப்பாடுகள் வெளிப்பட்டபோது, மகாராஷ்டிராவுக்கு அப்பாலும் வழக்கின் போக்கு கவனம் ஈர்த்தது.

அன்டிலியா அருகில் நிறுத்தப்பட்ட மிரட்டல் வாகனத்தின் உரிமையாளர் மான்சுக் ஹிரனை கொன்றதாக என்கவுன் டர் ஸ்பெஷலிஸ்டான உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸே கைது செய்யப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதர காவல் கறுப்பாடுகளான பிரதீப் சர்மா, சுனில் மானே உள்ளிட்ட 10 பேர் மீது என்ஐஏ வழக்கு பதிவு செய்தது. மும்பை காவல் ஆணையர் பரம்பிர் சிங் தலைமறைவாகி மீண்டார். அமைச்சர் அனில் தேஷ்முக் பதவியிழந்து வேறு வழக்கில் கைதாகி வெளியில் வந்தார். மும்பை வாசம் பாதுகாப்பானதில்லை என்று முடிவு செய்த முகேஷ் அம்பானி குடும்பம், வருடத்தின் பாதி நாட்கள் வெளிநாட்டில் தங்குவதற்கு தோதாய் அங்கு மாட மாளிகைகளை வாங்கிப் போட்டது.

அன்டிலியாவில் ஆரம்பித்த விசாரணையின் போக்கில் அரசியலும் நுழைந்ததில், வேறு வழக்குகளின் பெயரால் இன்று வரை பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால் அந்த வழக்கின் பின்னணியும், அதன் சூத்திரதாரியும் இன்னமும் முழுமையாக வெளிப்பட்டாகவில்லை. நகரின் முக்கிய புள்ளிகளை மிரட்டி கோடிகளை குவித்த காவல்துறை - அரசியல் - அதிகார வலை மட்டும் பகுதியளவு அம்பலப்பட்டது. அதற்கு அப்பாலான மர்மங்கள் ஓராண்டுக்குப் பின்னரும் வெளிப்படாது அல்லது வெளியிடப்படாது நீடிக்கின்றன.

x