புதுச்சேரியை உலுக்கிய சிறுமி படுகொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை துவக்கம்


புதுச்சேரி: புதுச்சேரியை உலுக்கிய சிறுமி பாலியல் பலாத்கார படுகொலை வழக்கின் விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் இன்று துவங்கியது.

புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2ம் தேதி காணாமல் போனார். போதைப்பொருள் பயன்படுத்தியோரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் சடலத்துக்கு அஞ்சலி செலுத்த சென்ற அப்போதைய ஆளுநர் தமிழிசை, ஒரு வாரத்தில் தண்டனை தரப்படும் என்று தெரிவித்திருந்தார். இச்சம்பவம் தொடர்பாக விவேகானந்தன் (57), கருணாஸ் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

அவர்கள் மீது கடத்தல், அடைத்து வைத்தல், பலாத்காரம் செய்தல், கொலை, சாட்சிகளை அழித்தல், எஸ்.சி- எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், போஸ்கோ உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோரும் டிஜிபியை சந்தித்து மனு தந்தனர். வழக்கை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழு மெத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்தனர். அதனால் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரியிருந்தனர்.

இவ்வழக்கு பதிவாகி 55 நாட்களுக்கு பிறகு கடந்த மே 2ம் தேதி புதுவை போக்சோ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 83 சாட்சிகளின் வாக்கு மூலத்துடன் 600 பக்க குற்றப் பத்திரிகை கடந்த மே 23ம் தேதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை இன்று முதல் தொடங்கியுள்ளது.