பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகள், பவுத்த மதப் பேழைகள் மீட்பு


திருவாட்சியுடன் கூடிய நடராஜர்

சென்னையில் பல கோடி மதிப்புள்ள நடராஜர், கிருஷ்ணர் உலோக சிலைகள், பவுத்த மதப் பேழைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

பவுத்தப் பேழைகள்

சென்னை, ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் ஓரிடத்தில் தொன்மை வாய்ந்த சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குநர் ஜெயந்த் முரளி உத்தரவின்படி, அதிகாரிகள் நேரில் சென்று சோதனை நடத்தினர்.

சோதனையில் 2 அடி உயரம் கொண்ட திருவாட்சியுடன் கூடிய நடராஜர் சிலை, அதே போன்று ஒரு அடி உயரம் சிறிய நடராஜர் உலோக சிலை, ஒரு அடி உயரம் கொண்ட கிருஷ்ணர் சிலைகளை போலீஸார் கைப்பற்றினர். மேலும் 11 வேற்று மொழிகளில் எழுதப்பட்ட பவுத்த மத மந்திரப் பேழைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

நடராஜர்

கிருஷ்ணர்

இதுதொடர்பாக அவ்விடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சிலைகளுக்கான முழு ஆவணங்கள் ஏதும் இல்லாததால் பதினோரு மந்திரப் பேழைகள், கிருஷ்ணர், நடராஜர் சிலைகளை போலீஸார் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட பல கோடி மதிப்புள்ள இந்தச் சிலைகளை இவர்கள் எங்கிருந்து கொண்டு வந்தார்கள், இந்தத் தொன்மைவாய்ந்த சிலைகள் மற்ற கோவில்களிலிருந்து திருடப்பட்டதா என்பது குறித்தும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

x