வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும் பிரபல ரவுடியுமான பிபிஜிடி சங்கரின் சொத்துகள் முடக்கம்


வட்டத்துக்குள் பிபிஜிடி சங்கர்

பலதரப்பு மக்களை மிரட்டி சட்டவிரோதமாக சம்பாதித்த, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சங்கரின் ரூ.24 கோடி மதிப்புள்ள 79 சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்கு, நிலஅபகரிப்பு, கொள்ளை வழக்கு உட்பட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் 3 வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் பிபிஜிடி சங்கர் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி ரவுடி சங்கர், அவரது உறவினர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.. சோதனையில் சங்கர் பினாமி பெயரில் பல சொத்துகள் வாங்கி குவித்ததும், ரவுடியாக இருந்து பலரது நிலங்களை அபகரித்து தனது பினாமி பெயரில் சொத்துகளை சேர்த்ததும் தெரியவந்துள்ளது. சட்டப்பூர்வமான முறையில் தொழில் செய்து சொத்துகளை வாங்காததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் 79 சொத்துகளுக்கான எவ்வித ஆவணங்களையும் ரவுடி சங்கர் சமர்ப்பிக்காததாலும், சொத்துகளை வாங்கப் பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விளக்கம் அளிக்காததாலும் அவரது சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக சொத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தைப் பெற்று பினாமி பெயரில் சொத்துகளை வாங்கிக் குவித்தது தெரியவந்தது.

சங்கர் அண்மையில் கொலை செய்யப்பட்ட ரவுடி பிபிஜி குமரனின் சகோதரர் என்பதும், ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு உட்பட்ட வளர்புரம் ஊராட்சி மன்றத்தின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

x