ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை


பிரகாஷ்

மயிலாடுதுறையில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தொடங்கி செயல்பட்டுவரும் நிலையில், அந்த நீதிமன்றத்தில் முதல் முறையாக கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை அருகே மாப்படுகையைச் சேர்ந்தவர் விவசாயி சேகர் (58). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ்(49) என்பவருக்கும் நிலத்தகராறு தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி அப்பகுதியில் உள்ள டீக்கடையில் சேகர் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கும், பிரகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ் அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகு கட்டையை எடுத்து, சேகரை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சேகர் உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸார் கொலை வழக்குப் பதிவுசெய்து, பிரகாஷை கைது செய்து வழக்கு நடத்தி வந்தனர். இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அரசு வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகிய இவ்வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று நீதிபதி பன்னீர்செல்வம் கொலைக் குற்றவாளி பிரகாஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மயிலாடுதுறையில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தொடங்கப்பட்டு முதல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, குற்றவாளி பிரகாஷை போலீஸார் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டுசென்றனர்.

x