நாகப்பட்டினம் அருகே தனது மனைவியையும், 2 மகள்களையும் கொலை செய்தவர், தானும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம், சிக்கல் கிராமத்தை அடுத்த புதுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் லட்சுமணன், புவனேஸ்வரி தம்பதியினர். அப்பகுதியில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு தனலட்சுமி, வினோதினி, அட்சயா என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களில் மூத்தவரான தனலட்சுமி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி வேறு சாதியைச் சேர்ந்தவரை, காதல் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாத லட்சுமணன், கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதுகுறித்து வீட்டில் அடிக்கடி பிரச்சினை நடந்து வந்திருக்கிறது. வீட்டில் அவர்கள் நடத்தி வந்த உணவகம், கடந்த 4 நாட்களாக திறக்கப்படவில்லை. இன்று காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாத நிலையில், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அளித்த புகாரின் பேரில், கீழ்வேளூர் காவல் துறையினர் வந்து வீட்டை சோதனை செய்ததில் 4 பேரும் பிணமாக கிடந்தனர்.
போலீஸாரின் விசாரணையில், நேற்று நள்ளிரவு மனைவி புவனேஸ்வரி மற்றும் மகள்கள் வினோதினி, அட்சயா ஆகியோரின் தலையில் அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போதே குழவிக் கல்லைப் போட்டு லட்சுமணன் கொலை செய்திருப்பதும், அதைத் தொடர்ந்து அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜவஹர், நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து கீழ்வேளூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.