பாஜக தலைமையகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு


வினோத்

சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமையகத்தின் மீது, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து குண்டு வீசியதாக சரித்திரப் பதிவேடு குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை, தி.நகர் வைத்தியராமன் தெருவில் பாஜக தலைமையகமான கமலாலயம் அமைந்துள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் நேரம் என்பதால், கமலாலயத்துக்கு எப்போதும் கட்சியினர் அதிகமாக வந்துசெல்கின்றனர். நேற்று இரவு தொண்டர்கள் அனைவரும் சென்ற பின்பு, கமலாலயம் பூட்டப்பட்டு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று(பிப்.10) அதிகாலை பாஜக அலுவலகத்துக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். தரையில் பட்டு பெட்ரோல் குண்டு வெடித்ததில், அங்கிருந்த தரைவிரிப்பு தீபிடித்து எரிந்து சேதமடைந்தது.

அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் மாம்பலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த போலீஸார் மற்றும் உயர் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் நடந்துவந்து பெட்ரோல் குண்டு வீசிச் சென்றது தெரியவந்தது. குண்டு வீச்சு தகவல் அறிந்து ஏராளமான பாஜக தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் குவிந்ததால், அப்பகுதி பரபரப்பாகியது.

விரைந்து நடவடிக்கை எடுத்து பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீஸார் அடையாளம் கண்டு கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தேனாம்பேட்டை எஸ்.எம் நகரைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி வினோத் (எ) கூர்கா வினோத்(38) என்பதும், குடிபோதையில் பெட்ரோல் குண்டு வீசியதும் தெரியவந்தது.

ஆளும் மத்திய பாஜக அரசு நீட் தேர்வு என்ற பெயரில் மாணவர்கள் உயிருடன் விளையாடுவதாகவும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வினோத்திடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கமலாலயம் மற்றும் அது அமைந்துள்ள தெரு முனை சந்திப்பில் எப்போதும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், இந்தப் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x