உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னையில் 392 ரவுடிகள் மீது வழக்கு பதிவு


சென்னை காவல் ஆணையர் அலுவலகம்

தமிழகத்தில் வருகின்ற 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுதும் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்தல் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைத்து, தேர்தல் பாதுகாப்பு குறித்த பணிகளில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகப் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை என்பதை ஆய்வு செய்ததில் 1,234 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் தேர்தலின்போது அசம்பாவிதம் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தேர்தலையொட்டி ரவுடிகள் நடவடிக்கைகளை கண்டறிந்து அவர்களை கைது செய்யும் பணியிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் நாளில் சென்னை முழுதும் 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ள காவல் துறை, தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு காரணங்களைக் கருதி, 392 ரவுடிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 211 ரவுடிகளிடம் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கி இருப்பதாகவும், பிரமாணப் பத்திரத்தை மீறிச் செயல்பட்டதாக 7 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

இதுவரை உரிமம் பெற்ற 1,101 துப்பாக்கிகள் சென்னை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கடந்த ஜன.28 முதல் பிப்.8-ம் தேதிவரை 37 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x