ஜெயங்கொண்டம் அருகே பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை கொலை செய்த தாத்தா கைது


வீரமுத்து.

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தை, துணியில் சுற்றப்பட்டு வாளி (பக்கெட்) தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்த வழக்கில் குழந்தையின் தாத்தாவை போலீஸார் இன்று (ஜூன் 17) கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம் அடுத்த உட்கோட்டை கிராமம் வடக்கு வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த வீரமுத்து மகள் சங்கீதா (21). இவருக்கும் கும்பகோணம் அடுத்த சுந்தரப் பெருமாள்கோயில் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (29) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கடந்த மாதம் சங்கீதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததால் தனது அப்பா வீட்டில் குழந்தையுடன் சங்கீதா தங்கியிருந்தார்.

இந்நிலையில், ஜூன் 14-ம் தேதி அதிகாலை சங்கீதாவின் அப்பா வீட்டில் உள்ள குளியல் அறையில் வாளி தண்ணீரில் பிறந்து 38 நாட்களே ஆன சங்கீதாவின் குழந்தை துணியில் சுற்றப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சங்கீதாவின் தந்தை வீரமுத்து, அம்மா ரேவதி மற்றும் சங்கீதா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தது குழந்தையின் தாய்வழி தாத்தா வீரமுத்து என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ''சங்கீதாவுக்கு பிறந்த குழந்தை சித்திரை மாதம் பிறந்துள்ளது. இதனால் அப்பா வழி குடும்பம், அம்மா வழி குடும்பம் என அனைவரின் குடும்பத்துக்கும் ஆகாது.

மேலும், திருமணம், பிரசவம் என ஏற்கெனவே அதிக கடன் பெற்ற நிலையில், இந்த குழந்தை இருந்தால் இன்னும் கூடுதல் கடன் ஏற்படும். பெற்றோர் அல்லது தாத்தா ஆகியோரை பலி வாங்கிவிடும் என சிலர் கூறியதை கேட்டு குழந்தையை துணியில் சுற்றி வாளி தண்ணீரில் அமுக்கி கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார் வீரமுத்து'' என தெரிவித்தனர்.

இதையடுத்து கொலை செய்தது எவ்வாறு என்பது குறித்து அவரது வீட்டில் வீரமுத்துவை நடிக்க வைத்து அதனை போலீஸார் வீடியோ பதிவு செய்தனர். இதையடுத்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வீரமுத்துவை இன்று ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தையால் தனது குடும்பமும், தனது சம்பந்தி குடும்பமும் அழிந்து விடும் என தாத்தாவே பேரனை கொலை செய்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x