புதுச்சேரியில் 6 டன் சந்தன கட்டை, துகள்கள் பறிமுதல்: தமிழக வனத்துறை நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை


புதுச்சேரி: புதுச்சேரியில் 6 டன் சந்தன கட்டை, துகள்கள் பறிமுதல் தொடர்பாக மகாராஷ்டிராவிலுள்ள நிறுவன இயக்குநருக்கு தமிழக வனத்துறை நோட்டீஸ் அனுப்பு நடவடிக்கை. அதே நேரத்தில் மிகப்பெரிய நிகழ்வு நடந்தும் புதுச்சேரி வனத்துறை மவுனத்தில் உள்ளது. தவறு செய்தோர் எவ்வளவு வலிமையானவராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி தந்துள்ளார்.

கேரளாவில் இருந்து சேலம் வழியாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு சந்தன கட்டைகள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து சேலத்தில் வனத்துறை அதிகாரிகள் கடந்த 3-ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் சந்தன கட்டைகள் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து 1.50 டன் எடையுள்ள ரூ.3 கோடி மதிப்பிலான சந்தன கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரி வில்லியனூர் அருகே உளவாய்க்கால் பகுதியில் புதுச்சேரி அமைச்சர் மகளுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சந்தன கட்டைகள் கடத்திக் கொண்டு செல்ல இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சேலம் உதவி வன பாதுகாவலர் செல்வக்குமரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி வில்லியனூர் அருகே உளவாயக்கால் கிராமத்தில் உள்ள அந்த வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக 156 பைகளில் வைக்கப்பட்டிருந்த சந்தன கட்டைகள், 53 பைகளில் வைக்கப்பட்டிருந்த சந்தன துகள்கள் என 6 டன் மர பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நீதிமன்ற அனுமதி பெற்று தமிழக வனத்துறையினர் பறிமுதல் செய்து சேலம் கொண்டு சென்றனர். தற்போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சேலம் வனத்துறை தரப்பில் விசாரித்தபோது, "புதுச்சேரியில் இந்தோ-ஆஃப்ரோ எசென்ஷியல் ஆயில் பிரைவேட் லிமிடெட்டில் 6 டன் சந்தன கட்டைகள், சந்தன தூள் கைப்பற்றன. இதற்கான ஆவணங்கள் புதுச்சேரியில் இல்லை. இங்குள்ளோர் யாரும் இதற்கு பொறுப்பு ஏற்கவில்லை. இந்நிறுவனம் மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக பதில் தருமாறு மகாராஷ்டிராவிலுள்ள முகவரியுடன் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் இயக்குநருக்கு நோட்டீஸ் தமிழக வனத்துறையால் அனுப்பப்படவுள்ளது.

தமிழ்நாடு வனச்சட்டத்தின் பிரிவு 49 (பி) இன் கீழ், அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நிறுவனத்தின் இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 21 நாட்களுக்குள் பதில் வரவில்லை என்றால், தமிழக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்குவார்கள். விசாரணை நடந்து வருகிறது. புதுச்சேரியில் உள்ள வனம் மற்றும் வன விலங்குத் துறையினர் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் 6 டன் சந்தன மரங்கள், தூள்கள் பிடிபட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருவது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நாங்கள் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விசாரணையை தொடருவோம்" என்றனர்.

எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும்: அமைச்சர் மகளுக்கு சொந்தமான இடத்தில் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்த விவகாரம் குறித்து துணை நிலை ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணனிடம் கேட்டதற்கு, "வாடகைக்கு ஒரு இடத்தை தந்த பிறகு அங்கு என்ன நடக்கிறது என்று இடத்துக்கு சொந்தமானவர்கள் ஆய்வு செய்வதோ, முற்றிலுமாக கண்காணிப்பதோ சாத்தியமில்லாத ஒன்று. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனை தமிழக காவல்துறை கண்டுபிடித்து சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளார்கள். இதில் தமிழக காவல்துறைக்கு புதுச்சேரி காவல்துறை ஒத்துழைப்பு தரும். இதன் மூலம் எத்தகைய தவறுகள் நடந்திருந்தாலும், அதன் முழுமையான அழுத்தை கண்டுபிடித்து உரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

x