லஞ்சப் பணத்தை மின்னல் வேகத்தில் மறைத்து போலீஸாரைத் திணறடித்த ஊராட்சி செயலர்!


பட்டாசுக்கடை நடத்த வரைபட அனுமதிக்கு லஞ்சமாக வாங்கியப் பணத்தை ஊராட்சி செயலர் மின்னல் வேகத்தில் மறைத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரை திணறடித்துள்ள சம்பவம் சாத்தூர் அருகே நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் , சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் திருமலைராஜ் (50). நிரந்தர பட்டாசுக் கடை நடத்த திட்டமிட்ட இவர், சாத்தூர் ஒன்றியம் மேட்டமலை ஊராட்சி அலுவலகத்தில் வரைபட அனுமதிக்காக விண்ணப்பித்தார். அனுமதிக் கட்டணமாக ரூ.31 ஆயிரம் மட்டுமே செலுத்த வேண்டியதிருந்தும், ஊராட்சி செயலர் கதிரேசன் கூடுதலாக ரூ.20 ஆயிரம் சேர்த்து ரூ.51 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. எதற்கு கூடுதலாக கேட்கிறீர்கள் என்று கேட்டபோது, மொத்தமாக கொடுத்தால்தான் வரைபட அனுமதி வழங்க முடியும். இல்லையென்றால் முடியாது என்று கதிரேசன் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார் திருமலைராஜ். போலீஸார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, மேட்டமலை ஊராட்சி செயலர் கதிரேசனிடம் கொடுத்தார் திருமலைராஜ். அவர் லஞ்சம் வாங்கிய சிறிது நேரத்திலேயே, லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், பாரதிபிரியா மற்றும் போலீஸார் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது வரைபட அனுமதிக்கான கொடுத்த ரூ.31 ஆயிரம் மட்டுமே அங்கிருந்தது. லஞ்சப் பணம் ரூ.20 ஆயிரத்தைக் காணவில்லை. அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்த போலீஸார், அதற்குள் பணம் எங்கே போயிருக்கும் என்று யோசித்தனர். அருகில் உள்ள டீக்கடையில் சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ரூ.20 ஆயிரம் லஞ்சப் பணத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ஊராட்சி செயலர் கதிரேசனை கைது செய்தனர்.

x