உயிருக்கு பயந்து நீதிமன்றத்தில் சரணடையும் ரவுடிகள்


ரவுடி தினேஷ்

சென்னையை சேர்ந்த பிரபல ரவுடிகளில் பெரும்பாலானோர் காஞ்சிபுரம், திருவள்ளுவர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். இவ்வாறு சென்னை புறநகர் பகுதியில் தஞ்சம் புகுந்த ரவுடிகள் அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகள், சரக்கு குடோன், லாரி செட், உரிமையாளர்கள், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, கட்டபஞ்சாயத்து, நில ஆக்கிரமிப்பு போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். புறநகரில் நாளுக்கு நாள் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து ரவுடிகளை ஒடுக்க என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை தலைமையில் டிசம்பர் மாதம் ரவுடி ஒழிப்பு படை அமைக்கப்பட்டது.

குறிப்பாக ஏ+, ஏ, பி என கேட்டகரி வாரியாக ரவுடிகளை பிரித்து கைது செய்யும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே கொலை, கொள்ளை உட்பட 42 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியான படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். ரவுடி குணாவை போலீசார் என்கவுண்டர் செய்யவுள்ளதாக வந்த தகவலை அடுத்து ரவுடி குணா நீதிமன்றத்தில் சரண்டைந்தார். இதனைத்தொடர்ந்து படப்பை குணாவின் கூட்டாளியான சேட்டு, பிரபு ஆகியோர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளியான ரவுடி தினேஷ் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். ரவுடி தினேஷ் மீது 7 கொலை, 20 கொலை முயற்சி வழக்கு உட்பட 38 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு 45 நாட்களில் 60க்கும் மேற்பட்ட அதி தீவிர குற்றங்களில் ஈடுபட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ஏ+,ஏ கேட்டகிரி ரவுடிகளான படப்பை குணா, பிரபு, சிவா, மணிமாறன், தினேஷ், தியாகு ஆகியோர் சரணடைந்துள்ளனர்.

ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டவுடன் ரவுடிகள் பலர் உயிருக்கு பயந்து சரணடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளிநாடுகளில் பதுங்கி உள்ள ரவுடிகளை கைது செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், ரவுடிகள் தேடுதல் வேட்டை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

x