திஹாரில் சுகேஷுக்கு விசுவாசம்: சிக்கிய சிறை அதிகாரிகள்!


சுகேஷ் சந்திரசேகர்

முறைகேடாகப் பணம் பெற்றுக்கொண்டு மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு சலுகைகள் தந்ததாக, திஹார் சிறையின் 3 அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை மற்றும் நடவடிக்கைகளை சிறைத் துறை உயரதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரின் பிரதான தொழில் இடைத்தரகராகச் செயல்படுவது. அப்படி தன்னை நம்பியவர்களை ஏமாற்றுவது அவனது உபதொழில்.

தினகரன் தரப்புக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தருவதற்காக, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், 2017-ல் சுகேஷ் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டான். அங்கிருந்தபடி, சிறையில் அடைபட்டிருக்கும் ரான்பாக்சி நிறுவனத்தின் முன்னாள் முதலீட்டாளர்கள் இருவரை விடுவிக்க உதவுவதாக பேரம் பேசி ரூ.200 கோடி மோசடி செய்திருக்கிறான்.

சிறையில் இருந்தபடியே சுகேஷ் தனது மோசடியைத் தொடர்ந்த விவகாரம், திஹார் நிர்வாகத்தின் அதிகாரிகளுக்கு எதிரான விசாரணை மற்றும் நடவடிக்கைகளுக்கு காரணமாகி உள்ளது. சிறை வளாகத்தில் சுதந்திரமாக உலாவவும், வெளியுலகை தொடர்புகொள்ளவும் உதவியதன் மூலம், 82 அதிகாரிகள் ரூ.30 கோடி வரை சுகேஷிடமிருந்து லஞ்சம் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் புதிய தகவலாக, சுகேஷுக்கு உதவுவதற்காக ரூ.1.25 கோடி லஞ்சம் பெற்றதாக, சிறை அதிகாரிகள் மூவரை உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவர்களில் துணை கண்காணிப்பாளர் அந்தஸ்திலான 2 அதிகாரிகள், மாவட்ட சிறைப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறைக்குள் சுகேஷுக்கு தேவையான வசதிகளை செய்துதருவது, சிசிடிவி கண்காணிப்பிலிருந்து அவனது நடவடிக்கைகளை மறைப்பது, வெளியிலிருந்து உதவிகளை ஒருங்கிணைப்பது ஆகியவற்றுக்காக, சுகேஷிடம் இருந்து இந்த அதிகாரிகள் லஞ்சம் பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

சுகேஷ் அடைக்கப்பட்டிருக்கும் சிறை மீதான கண்காணிப்பை அதிகரிப்பதுடன், அவனுக்கு உதவிய இதர அதிகாரிகள் குறித்தும் உயரதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

x