மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோயிலில் வெள்ளி படிச்சட்டத்தை திருடிய அர்ச்சகர்கள் கைது


கைதுசெய்யப்பட்ட கோயில் அர்ச்சகர்கள்

உற்சவமூர்த்தியை தூக்கிச்செல்லப் பயன்படுத்தப்படும் படிச்சட்டத்திலிருந்த வெள்ளித்தகடுகளை உரித்தெடுத்துவிட்டு, போலித் தகடுகளை தயார் செய்த அர்ச்சகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் உற்சவமூர்த்தியை தூக்கிச்செல்லப் பயன்படுத்தப்படும் (தோளுக்கினியாள் என்றழைக்கப்படும்) படிச்சட்டம் இருந்தது. இந்தப் படிச்சட்டம், மரத்தால் செய்யப்பட்டு மேலே வெள்ளித்தகடுகளால் கவசம் பதிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், இந்தப் படிச்சட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த வெள்ளிக் கவசத்தகடுகளை சிலர் உரித்து திருடிச் சென்றனர். இது தொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், திருடுபோன படிச்சட்டத்துக்குப் பதிலாக புதிதாக வெள்ளித்தகடுகள் பதித்த படிச்சட்டத்தை செய்து கோயிலில் வைக்க, சிலர் முயன்றுவருவதாக சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெங்கட்ராமன், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார்.

வெள்ளித்தகடுகள்

புகாரின் அடிப்படையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், வெள்ளித்தகடுகள் உரித்துத் திருடப்பட்டது உண்மை எனத் தெரியவந்ததது இதையடுத்து, சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சொத்துகளை கையாடல், அரசு ஊழியர் நம்பிக்கை மோசடியில் ஈடுபடுதல், குற்றம் நடந்தது தொடர்பாக தகவல்களை தர மறுத்தல், கூட்டுச் சதி, கொள்ளையடித்தல், பொய்யான ஆவணங்களை தயாரித்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய மயிலாடுதுறையைச் சேர்ந்த கோயில் அர்ச்சகர்கள் ஸ்ரீநிவாச ரெங்க பட்டர், முரளிதர தீட்சிதர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் படிச்சட்டத்தில் இருந்த வெள்ளித்தகடுகளை உரித்து திருடியது தெரியவந்தது.

மேலும், பழைய படிச்சட்டத்தை போன்றே போலியாக வெள்ளித்தகடுகள் பதித்து புதிய படிச்சட்டம் செய்வதற்காக, மயிலாடுதுறையில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஆர்டர் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நகைக்கடையில் புதிதாக செய்யப்பட்ட 15 கிலோ எடையுள்ள படிச்சட்ட வெள்ளி உருப்படிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதே கோயிலில் சிலைகள் காணாமல்போனது குறித்துப் போலீஸில் புகார் அளிக்கப்பட்டபோது, மீண்டும் சிலை கிடைத்துவிட்டதாகக் கூறி கொண்டுவந்து வைத்ததும், அப்புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவுசெய்தும் சிலை திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்யாமல் விட்டதும் தெரியவந்தது. சிலைகள் காணாமல்போனது குறித்தும் விசாரணை நடத்த உள்ளதாக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

x