மூதாட்டி வீட்டிலிருந்து 57 பவுன் நகை திருட்டு: தலைமைக் காவலர் உட்பட 7 பேர் கைது @ உளுந்தூர்பேட்டை 


கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே தனியாக வசித்த ராஜாமணி (64) என்ற பெண்ணின் வீட்டிலிருந்த 57 பவுன் நகை திருடிய வழக்கில் சிறைத்துறை தலைமைக் காவலர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 50 பவுன் நகையை மீ்ட்ட தனிப்படை போலீஸார், தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த தொப்பையாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தியின் மனைவி ராஜாமணி என்பவர், தனது விளைநிலப் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இவர் கடந்த 11-ம் தேதி அதிகாலை எழுந்த போது, வீட்டிலிருந்த பின்புற கதவு திறந்திருப்பதோடு, பீரோ திறந்த நிலையில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதில் வீட்டில் இருந்த 57 பவுன் நகை மற்றும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளும் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து ராஜாமணி அளித்தப் புகாரில், திருநாவலூர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து திருநாவலூர் காவல் ஆய்வாளர் குமார், உளுந்தூர்பேட்டை வட்ட காவல் ஆய்வாளர் வீரமனி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், திருட்டு வழக்குகளில் ஈடுபடும் நபரான கூ.நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாரி என்ற மாரிமுத்து, சங்கராபுரம் காவல் நிலைய வழக்கில் மாரியுடன் சிறையிலிருந்த குற்றவாளியான உதயா (24) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படை போலீஸார், திருட்டுக் கும்பல் கூ.நத்தம் கிராமத்தில் உள்ள ஏரி அருகே இருப்பதை அறிந்த போலீஸார், 5 நபர்களை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்துள்ளனர்.

இதையடுத்து விசாரணையில், அவர்கள் கூவாகத்தைச் சேர்ந்த மாரி (எ) மாரிமுத்து (31), திருவெண்ணைநல்லூரைச் சேர்ந்த உதயா (24) பண்ருட்டி பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சுதாகர் (32) நெய்வேலியை அடுத்த செடுத்தான்குப்பத்தைச் சேர்ந்த சுபாஷ் (25), விருதந்தாசலத்தை அடுத்த இந்திராநகரைச் சேர்ந்த கபார்தீன் (23) என்றும், தப்பி ஓடியவர் கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பதும் தெரியவந்துள்ளது.

இவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தொப்பையான்குளம் மூதாட்டி வீட்டில் 57 பவுன் நகை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 50 பவுன் நகையை போலீஸார் பறிமுதல் செய்தனர். எஞ்சிய 7 பவுன் சவரன் நகைகளை விற்ற ரூ.3,20,000 ரொக்கத்தையும், சம்பவத்திற்கு பயன்படுத்திய 3 பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த திருட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் கடலூர் மத்திய சிறை தலைமைக் காவலராக உள்ள தொப்பையான்குளம் ஞானமணி (48) உட்பட 6 நபர்களையும் கைது செய்த போலீஸார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவரை தேடி வருகின்றனர்.

x